பின்தொடருகிறார்கள் ஜாக்கிரதை (2)

பின் தொடருதலில் கவனம் தேவை என்று என்னுடைய முந்தைய பதிவில் சொல்லியிருந்தேன், ஆனால் அது மூவபிள் டைப் நிரலியை உபயோகப்படுத்துபவர்களுக்குத்தான் பொருந்தும். இப்பொழுது செய்தியோடை வசதியிலுள்ள இதுபோன்ற ஒரு ஜாக்கிரதையாக இருக்கவேண்டிய (கவனிக்கப்படவேண்டிய) விஷயம் (இது மூவபிள் டைப் உட்பட அனைத்து நிரலிகளுக்கும் பொருந்தும்).

( RSS, atom போன்ற செய்தியோடைகளைப்பற்றியும் அதன் நன்மைகளைப்பற்றியும் பலர் வலைப்பதித்திருக்கிறார்கள், விபரங்களுக்கு இந்தப்பதிவையும் பதிவிலுள்ள சுட்டிகளையும் பார்க்கவும்)

நாம் நமது வலைப்பதிவை பதிவிக்கும் பொழுது செய்தியோட்டைகளும் தானாகவே பதிவாகின்றன. இவ்வாறு பதிவான செய்தியோடைகளை படிப்பதற்கு "செய்தியோடைத்திரட்டிகள்" (RSS aggregators) உபயோகப்படுத்தப்படுகின்றன. செய்தியோடைத்திரட்டிகள் பல்வேறு செய்தியோடைகளை சில நொடிகள் சில முதல் நிமிடங்கள் வரை இடைவெளி விட்டு புதுப்பிக்க முற்படும். இவ்வாறு முற்படும்பொழுத ஏதேனும் புதிய பதிப்புகள் தெண்பட்டால் அதனை தரவுமாற்றம் (cache) செய்துகொள்ளும். இந்த தரவுமாற்றம் வசதி அனைத்து செய்தியோடை திரட்டிகளிலும் இல்லாமற்போனாலும், பெரும்பாலான திரட்டிகளில் உண்டு. இந்த தரவுமாற்றம் உத்தி செய்தியோடைகள் வேகமாக செயல்பட உதவுகின்றன. ஆனால் இந்த தரவுமாற்றத்தினால் சில சிக்கல்களும் உண்டு. உதாரணத்திற்கு இப்பொழுது ஒரு வலைப்பதிவாளர் தனது ஒரு புதிய பதிவினை உள்ளிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம், அவரது செய்தியோடையும் தானாகவே ப(பு)திப்பிக்கப்படும். இப்பொழுது அப்பக்கத்தை பார்வையிடும் செய்தியோடை திரட்டிகள் பதிவுகளை தரவுமாற்றம் செய்துகொண்டு அந்த வலைப்பதிவின் நகலை அதனுள் சேமித்து வைக்கும். அந்த வலைப்பதிவாளர் தனது பதிவினை பிறகு மாற்றினாலும் தரவுமாற்றம் செய்யப்பட்ட தகவல்கள் மாறாது. இதனால் என்ன என்கிறீர்களா?
உதாரணத்திற்கு "பெயரிலியின்" பதிவுகளை எடுத்துக்கொள்வோம் (பெயரிலி என்னை மன்னிப்பாராக). மாலைப்பெயரிலி, கண்கானிப்புப்பெயரிலி என்று மாற்றி மாற்றி பதிந்துகொண்டிருக்கும் பொழுது ஏதாவது ஒரு பெயரிலி பினாத்துவதற்குப்பதிலாக தன் சொந்தப்பெயரில் பதிந்துவிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்தப்பதிவினை சரிசெய்வதற்கு முன்னர் ஏதாவது ஒரு செய்தியோடைத்திரட்டி அந்தப்பதிவினை தரவுமாற்றம் செய்துவிட்டால் அவரின் குட்டு உடைபட்டுவிடும்.
இதைப்பற்றிய மற்றுமொரு (பட)விளக்கம் (வலைப்பூ ஆசிரியர் அருணா ஸ்ரீனிவாசன் தவறாக எடுத்துக்கொள்ளமாட்டார் என்ற நம்பிக்கையுடன்):


(படத்தை பெரிது படுத்த அதன்மேல் சுட்டவும்).

படத்திலிருப்பது எனது செய்தியோடை திரட்டியில் பதிவுகள் தெண்படும் விதம். இதில் வலைப்பூவிலிருந்து தரவுமாற்றம் செய்யப்பட்ட பதிவின் அசலையும் அதன் திருத்தப்பட்ட இடுகையையும் காணலாம்.

எனவே வலைப்பதியும் முன் இரண்டு முறையேனும் பதிவினை படித்துப்பார்ப்பது நல்லது.

(எச்சரிக்கை மேல் எச்சரிக்கையாக விடுத்துக்கொண்டிருக்கும் எனக்கு ஒரு எச்சரிக்கை வருவதற்கு முன் .... ஜூட்)



அனுப்பியவர்: கண்ணன் @ பின்தொடருங்கள்