பின்தொடருகிறார்கள் ஜாக்கிரதை

தற்பொழுது பின்தொடருதல்(Trackback) வசதி அனேகமாக எல்லா தமிழ் வலைப்பதிவுகளிலும் முளைக்க ஆரம்பித்துள்ளது. பின்தொடருதல் பதிவுகளை தொடர்பு படுத்த (அல்லது அல்கொய்தா மாதிரி வலை அமைக்க) நிச்சயமாக ஒரு மிக நல்ல வழிமுறை. கணினியே ஆனாலும் ஒருத்தரை பின்தொடரும் பொழுது ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. (இந்த இடத்தில் ஜாக்கிரதை என்ற வார்த்தையை விட கவனம் என்று உபயோகப்படுத்தி இருக்கலாம ஆனால் பதிவின் தலைப்பு நன்றாக இராதே ). மூவபிள் டைப் போன்ற சில வலைப்பதிவு நிரலிகள், பின்தொடருதலை தாமாகவே மேற்கொள்ளும் (எள் என்றால் எண்ணையாக கொண்டுவரும்). அதாவது நாம் ஏதாவது வலைக்குறிப்பை தொடர்புபடுத்தி பதிவு செய்திருந்‌தோமேயானால், மூவபிள் டைப் நமக்கு வேலை வைக்காமல் தானாகவே அந்‌த வலைக்குறிப்பின் கருத்தில் நமது குறிப்பின் முகவரியையும், அதன் சாரத்தையும் சேர்ப்பித்துவிடும். இவ்வாறு சேர்ப்பித்த சாரம் நமது வலைகுறிப்பில் இல்லாமல் நாம் தொடர்பு படுத்திய வலைகுறிப்பில் குடிகொண்டிருக்கும் அதனால் அந்‌த சாரத்தை நம்மால் மாற்ற முடியாது. இதனால் என்ன ஆகும் என்று கேட்கிறீர்களா?
நாம் ஏதாவது ஒரு விஷயத்தை தவறாக வலைகுறித்து விட்டு பிறகு நமது குறிப்பை மாற்றியமைத்தாலும் இந்த சாரம் காட்டிக்கொடுத்துவிடும்.
சரி இதனால் எனக்கு பின்தொடருதல் தேவையில்லை என்று தோன்றுகிறதா? கவலையை விடுங்கள், மேற்சொன்னது மூவபிள் டைப்பிற்கு மட்டும்தான் (நியூக்ளியஸ் எப்படி என்று எனக்குத்தெரியாது), உங்கள் தளம் ஹேலோ ஸ்கேன் போன்ற மூன்றாம் தளங்களிலிருந்‌து பின் தொடருதல் வசதியைப் பெற்றிருந்‌தால் இதுபோன்ற தானியங்கி பின் தொடருதல் நடைபெறாது. மேலும் மூவபிள் டைப் நிரலியில் நாம் இந்த செயல்பாட்டினை மாற்றியமைக்கலாம். எனவே நீங்கள் மூவபிள் டைப் (அல்லது அதுபோன்ற) நிரலியை உபயோகித்தால் அதில் பின் தொடருதல் வசதி எப்படி அமைக்கப்பட்டிருக்கிறது(அல்லது எப்படி வேலைசெய்கிறது) என்பதை தெரிந்துகொள்வது நல்லது.

அனுப்பியவர்: கண்ணன் @ பின்தொடருங்கள்