எனது இங்கிலாந்து பயணம்
"கண்ணன், இன்றையிலிருந்து மூன்றாவது வாரம் நீ ரெடிங்கில் இருக்கவேண்டும்", எனது "பாஸ்" என்னிடம் சொல்லிவிட்டு சென்றார். ஏற்கனவே இதை எதிர்பார்த்திருந்ததால் ஒரு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தாமல் தலையாட்டிவைத்தேன் .ஒரு மாத பயணமே ஆயினும், தனியாக செல்லவேண்டியிருந்ததால் என் இஷ்டப்படி ஐரோப்பாவை ஒரு சுற்று வந்துவிடவேண்டும் என்ற ஆயத்தம் செய்து கொண்டு இங்கிலாந்து பயண ஏற்பாடுகளை துவங்கினேன். இது இங்கிலாந்திற்கு எனது இரண்டாவது விஜயம், இம்முறை ஐரோப்பா கணவுகளும் சேர்ந்துகொண்டதால் வெகு உற்சாகத்துடன் ஆயத்தமானேன், ஆனால் பயண ஏற்பாடுகளில் வந்த தடங்கல்கள்(சிக்கல்கள்?) படிப்படியாக எனது உற்சாகத்தை விழுங்க ஆரம்பித்தன.
முதலில் எனது பயண ஏற்பாட்டாளர் செய்த குளறுபடியால் தவறான விசா ஃபாரத்தை உபயோகித்து பிரிட்டன் விசாவிற்கு விண்ணப்பித்தேன். ஒரு வாரம் கழித்து, மீண்டும் விசாவிற்கு விண்னப்பிக்க வேண்டியதாயிற்று. இந்த ஒரு வார தாமதம், பிரிட்டன் பயணத்தை பாதிக்கவில்லையெனினும், எனது ஐரோப்பா கணவின் மீது இடியாக விழுந்தது. கிளம்புவதற்கு ஒரு வாரமே இருந்த நிலையில் ஃபிரெஞ்சு விசாவிற்கு விண்ணப்பித்தேன்
"ஃபிரெஞ்சு விசா இரண்டே நாட்களில் கிடைத்துவிடும், கவலையே படவேண்டாம்" - இது என் பயண ஏற்பாட்டாளர் .
நான் நினைத்தபடியே இரண்டு நாட்களுக்கு எதுவும் நடக்கவில்லை.
மூன்றாம் நாள், "நீங்க ஃபிரான்சில் தங்குவதற்கு இன்டெர்நெட்ல ஹோட்டல் புக் செஞ்சிருக்கீங்க, ஃபிரெஞ்சு எம்பஸில இத ஒத்துக்கமாட்டேங்கிறாங்க" என்று ஒரு குண்டைத்தூக்கிப் போட்டார். ஃபிரான்சில் நான் தங்குவதற்காக ஏற்பாடு செய்திருந்த யூத் ஹாஸ்டலை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, ஃபேக்ஸ் மூலம் எனது பதிவிற்கான அத்தாட்சியை அணுப்பபெற்றேன் (இதற்கு இரண்டு முறை தொலைபேசியில் அந்த ஃபிரெஞ்சு யூத் ஹாஸ்டலை தொடர்பு கொண்டதும், மறுமுனையில் இருந்த ஃபிரெஞ்சு பென்மணியிடம் எனது நிலையை அவருக்கு புரியும்படியான ஆங்கிலத்தில் எடுத்துரைத்ததும் தனி கதை).
"இன்னும் ஒரே நாளில் விசா வந்துவிடும், கவலையே படாதீங்க"
அடுத்த நாள் (வியாழன்), "இன்றக்கு உங்கள் பாஸ்போர்ட், டிக்கெட் எல்லாம் ஃபிரெஞ்சு எம்பஸிக்கு போயிருக்கிறது, நாளைக்கு வந்துவிடும்". புன்னகையுடன், மிகவும் நம்பிக்கையாக (வேறு யார் எனது பயண ஏற்பாட்டாளர்தான்).
நான் வெள்ளிக்கிழமை பெங்களூரிலிருந்து கிளம்ப வேண்டும், ஆனால் எனது பாஸ்போர்ட் மற்றும் லண்டன் விமான டிக்கெட் மும்பாயிலுள்ள ஃபிரஞ்சு எம்பஸியில்.
என் பயண ஏற்பாட்டாளர், வெள்ளிக்கிழமை மாலை எனது பாஸ்போர்ட்டை ஃபிரெஞ்சு எம்பஸியிலிருந்து பெற்று எனக்கு அனுப்புவதாக சூடம் ஏற்றாமல் சத்தியம் செய்ததால் வேறு வழியில்லாமல் பெங்களூரிலிருந்து டில்லிக்கு எனது பாஸ்போர்ட், லண்டன் டிக்கெட் மற்றும் இன்ஷூரன்ஸ் இவை எதுவும் இல்லாமல் பயணத்தை துவங்கினேன்....
(தொடரும்)
0 Shouts:
Post a Comment
<< Home