விஜயபுரத்து விஜயம்....

"கண்ணா மணி நாலாச்சு எழுந்திரு ..."
"இன்னும் ஒரு நிமிஷம் அப்பா.."
...
"கண்ணா மணி நாலரை, எழுந்திரு .."
"ஒரே ஒரு நிமிஷம்மா..."
"கண்ணா எழுந்திருக்கப்போறியா இல்லியா? கோவில்ல மணி அடிக்க ஆரம்பிச்சாச்சு", இது அப்பா.

ஒவ்வொரு வருடமும் மார்கழி காலையில் விஜயபுரத்திற்கே கேட்கும் உரையாடல் இது. வீட்டில் படுக்கையறை வாசற்புரத்திற்க்கு அருகாமையில் இருப்பதால் நிச்சயம் கோவிலுக்கு வருபவர்கள் வெங்கடேச சுப்ரபாதத்திற்கு முன்னர் இதைத்தான் கேட்பார்கள்.
மார்கழி மாதம் ஆரம்பித்துவிட்டாலே போதும், தினசரி நான்கு மணிக்கே விழித்துக்கொள்ளும் அம்மா மூன்றுமணிக்கே எழுந்துவிடுவாள். ஏழு மணி வரைத்தூங்கும் எனக்கு கோவில் மணி ஒரு சிம்ம சொப்பனமாகவே இருந்தது, கும்பகர்ணன் ஆறு மாதம் ஒரு சேரத் தூங்குவானாமே? ஒரே பொறாமையாக இருக்கும்.

நாலரை மணிக்கு தூக்க கலக்கத்தோடு வாசற்புரம் வந்து அம்மா இடும் கோலத்தைப் பார்வையிடுவது எனது வாடிக்கை. மற்ற நாட்களை விட மார்கழி மாதக் கோலம் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும். தெருவில் பல வீடுகளில் வண்ணக்கோலங்கள் போட்டிருப்பார்கள், ஆனாலும் அம்மாவின் வெள்ளை மற்றும் காவியிலான கோலமே மிகவும் நேர்த்தியாக இருக்கிறதென்று தோன்றும்.

பெருமாள் கோவில் கிராமபோனின் உதவியோடு மார்கழி மாதம் முழுவதும் டி.எம்.எஸ் "புல்லாங் குழல் கொடுத்த மூங்கில்களை" கண்ணனின் புகழ் பாட அழைப்பார். எஸ்.பி.பியும் தன் பங்கிற்கு "ஆயர்பாடி மாளிகைக்கு" சென்று தாலாட்டு பாடிவிட்டு வருவார். எல். ஆர். ஈஸ்வரி, "கோபியர்களைக்" கூப்பிடுவார். பி.சுசிலா "குருவாயூருக்கு" அழைத்து செல்வார். எஸ். ஜானகியோ "கோகுலத்தின் பசுக்களையே" பாட வைப்பார். இந்த பாட்டுக்கள் இல்லாத மார்கழி மொட்டையில்லாத திருப்பதி போல இருக்கும். அல்லது பெங்களூர் மாதிரி :-( இருக்கும்.

லெக்ஷ்மிநாராயணப் பெருமாள் காலை நான்கு மணிக்கே பிஸியாகிவிடுவார். மற்ற நாட்களில் கோவில் பக்கமே எட்டிப்பார்கத சுட்டிப் பயல்கள் கூட காலையில் நான்கு மணிக்கே "மடிநிறையப் பொங்க"லுக்காக கோவிலில் சமர்த்துப் பிள்ளைகளாக ஆஜராகி விடுவார்கள். பெருமாளும் அவர்களை ஏமாற்றியது இல்லை, சில சமயம் போனஸாக சர்கரைப்பொங்கல் அல்லது ததியோன்னம் (தயிர் சாதம்) என்று வழங்கி ஊக்கப்படுத்துவார். மிகவும் சுறுசுறுப்பான சில சுட்டிகள் பெருமாளிடம் போனஸை வாங்கிவிட்டு தெருவின் அடுத்த கோடியிலுள்ள பிள்ளையாரிடமிருந்தும் பொங்கலை சேகரித்து விடுவார்கள். ஐந்து நிமிட இடைவெளிக்குள் அரை கிலோமீட்டர் தூரத்தை கடக்க வேண்டுமென்பதாலும், பெருமாளின் தனி கவனிப்பு இருந்ததாலும் நான் அந்த போட்டிக்கு "காய்" விட்டுவிடுவேன்.

(விஜயபுரத்து மார்கழி விஜயம் தொடரும்...)

அனுப்பியவர்: கண்ணன் @ பின்தொடருங்கள்