விஜயபுரத்து விஜயம்

"மார்கழி மாதம் என்றதும் சிலபேருக்கு எப்படி சங்கீத ஞாபகம் வந்துவிடுகிறதோ" என்று இவ்வார வலைப்பூ வாத்தியார் எம்.கே. குமார் கேட்டிருக்கிறார். மற்றவர்களுக்கு எப்படி என்று தெரியாது ஆனால் ஒவ்வொரு வருடமும் அந்த பாடல்கள் ஒலிக்காமல் எனது மார்கழிக் காலை விடிவந்ததில்லை அதனால்தானோ என்னவோ இப்பொழுதும் வலையின் வாயிலாக அந்த பாடல்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன் :-).

இனி மீன்டும் விஜயபுரத்துக்கு...

மார்கழிப் பொங்கல், லெக்ஷ்மிநாராயணப் பெருமாளுக்கு அந்தப் பொங்கலைப் பற்றி என்ன அபிப்பிராயம் என்று எனக்குத்தெரியாது ஆனால் எனக்கு அது அமிர்தமாக இருந்தது. இப்பொழுதும் பெங்களூர் பொங்கலை சாப்பிடும் (குடிக்கும்) பொழுது அந்த எண்ணம்உறுதிப்படுகிறது. பொங்கல் மட்டுமல்ல பெருமாள் கோவிலில் புளியோதரை பிரசாதம் என்றால் அன்று வேறெதுவும் சாப்பிட வேண்டாம் எனக்கு. கோவில் அர்ச்சகர் கைவண்ணம் அவ்வளவு பிரமாதமாக இருக்கும். கோவில் பிரசாதம் எங்கள் வீட்டு உபயம் என்றால் அவ்வளவுதான் குஷியில் பெரிய துள்ளலே போட்டுவிடுவேன், பின்னே துனி மூடிய வெண்கலப் பாத்திரத்தில் பிரசாதம் வீடு தேடி வரும் என்றால் சும்மாவா இருக்க முடியும்.

மார்கழியில் மறக்க முடியாத வேறு ஒன்று கல்யாணமகாதேவி, அம்மா பிறந்த கிராமம். திருவாரூரிலிருந்து மன்னார்குடி செல்லும் வழியில் காட்டாற்றுக் கரைகளிலே அமைந்திருக்கும் இனிமையான கிராமம். கிராமத்தில் அதிகம் பயிரிடும் கரும்பு கூடுதலாக இனிப்பைச் சேர்க்கும்.

ஒவ்வொரு வருடமும் தேர்வு விடுமுறைக்கு தவறாமல் சென்றுவிடும் இடம். சில வருடங்கள் அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்கும் சென்று விடுவேன். நான் மட்டும் தனியாக இருந்திருந்தால் இந்த அளவிற்கு மனதில் நின்றிருக்காது என்றே சொல்ல வேண்டும். பின்னே எனது நான்கு மாமாக்கள், நான்கு சித்திகள் மற்றும் வாண்டுகள் மொத்தமும் சேர்த்து 20 உறுப்படிகள் கூடும் இடமென்றால் கொண்டாட்டம் தானே. அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்கு இதில் பாதி கூட்டமாவது இருக்கும். அச்சமயங்களில் அந்த கிராமமே களை கட்டும். அங்கும் கோவிலை ஒட்டினார்போல வீடு எங்களுடையது, நாங்கள் வந்து போகும் சமயங்கள் தவிர பாட்டி அங்கு சிலந்தி மற்றும் இன்ன பிற பூச்சிகளுடன் குடியிருக்கும் இடமது.

கிராமத்துக் கோவில் அர்ச்சகரும் திருவாரூர்க் கோவில் அர்ச்சகரும் ஏதோ ஒருவகையில் சொந்தமாக இருந்திருக்க வேண்டும், பின்னே இருவரும் பொங்கலை எப்படி அச்சசல் ஒரே மாதிரி செய்ய முடியும்? கிராமத்தில் இருப்பதால் பொங்கலுக்கு போட்டி குறைவு, வீடு தேடி வந்து விடும். இருந்தாலும் வாண்டுகள் அனைவரும் சேர்ந்துக்கொண்டு "சிற்றஞ் சிறுகாலே" கோவிலுக்குப் படையெடுப்பது வாடிக்கை.


அனுப்பியவர்: கண்ணன் @ பின்தொடருங்கள்