எனது இங்கிலாந்து பயணம் (2)

வெள்ளிக்கிழமை மதியம் பெங்களூரிலிருந்து கிளம்பி இரண்டரை மணி நேரங்கழித்து மாலை புது தில்லியில் வந்திறங்க வேண்டும்.
இரண்டரை மணி நேரமே பயணம் என்றாலும், பலமுறை பெற்ற அனுபவத்தால் அது எனக்கு ஒரு மிகப் பெரிய வேலையாகத் தோன்றியது. விமானப்பயணங்கள் ரயில் பயணங்கள் போல அவ்வளவு இனிமையாக இருப்பதில்லை. நிச்சயமாக முதல் முறை விமானத்தில் பயணிக்கும் பொழுது ஏற்படும் மகிழ்ச்சி மற்றும் பயம் கலந்த அனுபவம் நன்றாகத்தானிருக்கும், ஆனாலும் ஏனோ அது அடுத்தடுத்த பயணங்களில் காணாமற்போய்விடுகிறது.
முதல் முறை பயணிக்கும் பொழுது, ஜன்னல் இருக்கைதான் வேண்டும் என்று விமானப் பணிப்பெண்ணிடம் அடம்பிடித்தது இன்னமும் நினைவிலிருக்கிறது . அப்பொழுது எனக்கு முன்னர் வரிசையில் இருந்தவர் தயவு செய்து ஜன்னல் இருக்கை வேண்டாமென்று கேட்டுக்கொண்டிருந்ததைப் பார்த்து ஒரே ஆச்சரியப்பட்டேன். உள்நாட்டு விமானங்களில் ஜன்னல் இருக்கை ஒரு பெரிய விஷயமில்லைதான் ஆனால் போயிங் 747 போன்ற விமானங்களில் ஜன்னல் இருக்கைக்கு ஆசைப்பட்டால் "மறக்கமுடியாத" பயண அனுபவங்கள் ஏற்படுவது நிச்சயம்.

முன்பு ஒரு முறை சிங்கப்பூரிலிருந்து கலிஃபோர்னியா பயணத்தின் போது ஏற்பட்ட அந்த "மறக்கமுடியாத" ஜன்னல் இருக்கை அனுபவத்தால் (14 மணிநேர தொடர் பயணம் எகானமி வகுப்பில்) இம்முறை பயணத்தின் போது நடைபாதையோர இருக்கை கிடைத்ததும்தான் நிம்மதி வந்தது. விமானத்தில் ஏறும்பொழுது தனிமையை போக்கும் எனது ஆயுதங்கள் இருக்கின்றனவா என்று இருமுறை சரி பார்த்துக்கொண்டேன், அவை:
1. எனது (கை)பைக்கணிணி
2. நான் படித்துக்கொண்டிருக்கும் புத்தகங்கள்.
3. கடைசி ஆயுதம் ஒரு கர்சீஃப், (கண்ணில் கட்டிக்கொண்டு தூங்கினால் தனிமையாவது மண்ணாவது, உலகம் இருப்பதே மறந்துவிடும்).
இவ்வளவும் பெங்களூர் தில்லி பயணத்திற்கே, அப்பொழுது தில்லி-லண்டன் பயணத்தைப் பற்றி நினைக்கும் நிலையில் நான் இல்லை.

பெங்களூர் விமான நிலையத்தை அடைந்தபொழுதிலிருந்தே கையில் அப்பொழுது படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டேன். ஃப்ரிஜாப் காப்ரா எழுதிய "டாவோ ஆஃப் பிசிக்ஸ்" என்ற புத்தகம் அது. சிறு வயது முதலே அறிவியல் மற்றும் வானவியலில் ஆர்வம் அதிகமாக இருந்ததால் நான் படிக்கும் புத்தகங்களில் பல இது போன்றிருப்பதில் ஆச்சரியமில்லை. இப்புத்தகத்தில் காப்ரா கீழை நாடுகளின் தத்துவங்களையும் மத வழக்கங்களையும் தற்பொழுதைய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஒப்பிடுகிறார். புத்தகம் முழுவதிலும் இந்து மற்றும் பௌத்த மதங்களின் நெறிகளும் போதனைகளின் ஆதிக்கமே இருந்தது. அறிவியலையும் ஆன்மிகத்தையும் வேறுபடுத்தியே பார்(கும்)த்த நம் மனநிலைகளுக்கு ஒரு பேராச்சரியமாக இப்புத்தகம் இருக்கும் என்பது நிச்சயம். அப்புத்தகத்தை படிக்கும் பொழுது நான் படித்துக்கொண்டிடுந்த மற்றொரு புத்தகமான "யுனிவர்ஸ் இன் எ நட்ஷெல்" மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. ஒரு புத்தகம் முற்றிலும் அறிவியல் கண்ணோட்டத்தின்படி எழுதப்பட்டது, மற்றொன்றோ ஆன்மிகக் கண்ணோட்டத்தின் மூலம் அறிவியல் கண்டுபிடிப்புகளை பார்க்கும் வகையில் எழுதப்பட்டது ஆனால் இரண்டு புத்தகங்களுக்கும் நிறைய ஒற்றுமை இருப்பதாகவே எனக்குப்பட்டது. (அப்புத்தகங்கள் பற்றி தனியாக வலைப்பதிய வேண்டும்).

புத்தகத்தை படித்துக்கொண்டிருந்ததாலும், அதனை மற்றொரு புததகத்துடன் ஒப்பிட்டு ஆச்சரியப்பட்டுக்கொண்டிருந்ததாலும், எனது பாஸ்போர்ட் மற்றும் லண்டன் டிக்கெட் பற்றிய நினைவுகள் தொல்லைசெய்யவில்லை. எனது பாஸ்போர்ட் மற்றும் டிக்கெட்டுகள் அன்றே மும்பையிலிருந்து கூரியர் மூலம் புறப்பட்டாக வேண்டும், டில்லி விமான நிலையத்தில் இறங்கிய பின்னரே இது எனக்கு பலமாக உரைத்தது.முதல் முறையாக கலக்கம் சற்றே எட்டிப்பார்த்தது. அக்காவும் அத்திம்பேரும் தவறாமல் எனக்காக காத்திருந்தார்கள். அவர்களைப் பார்த்தபிறகே கொஞ்சம் நிம்மதி கிடைத்தது.
உடனே பெங்களூருக்கு போன் செய்து எனது பயண ஏற்பாட்டாளரை அழைத்தேன்.

"கண்ணன் ஒரு கெட்ட செய்தி, உங்களுக்கு ஃபிரஞ்ச் விசா கிடைக்கவில்லை"

(தொடரும்)

அனுப்பியவர்: கண்ணன் @ பின்தொடருங்கள்