என் இங்கிலாந்து பயணம் (3)

ஃபிரெஞ்சு விசா கிடைக்கவில்லையென்றவுடன் இங்கிலாந்து பயனத்தில் இருந்த அனைத்து உற்சாகமும் செத்துபோய்விட்டது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது. வேறு வழியின்றி (மனதிற்குள் நன்றாக வசைபாடிக்கொண்டே) "சரி விடுங்க என்னுடைய பாஸ்போர்ட், விமான டிக்கெட் எல்லாம் என்ன ஆச்சு" என்றேன்.
"அதை கூரியரில் அனுப்பியிருப்பார்கள்" என்றார்.
"அப்போ அனுப்பிட்டாங்களா இல்லையான்னு உங்களுக்கு தெரியாதா?"
"....."
"நீங்க உங்க மும்பாய் ஆபீஸ் நம்பரை கொடுங்க"
இப்பொழுதுதான் அவருக்கு சற்று உறைத்திருக்க வேண்டும், பிறகு அவரே மும்பாய் அலுவலகத்தை தொடர்பு கொண்டு எந்த கூரியரில் பாஸ்போர்ட் வந்து சேரும் என்ற தகவலை சொன்னார்.
"நாளைக்கு காலை அல்லது மதியம் வந்து சேர்ந்துவிடும்"
அப்பொழுது தான் எனக்கு உறைத்தது, மறுநாள் இரவு நான் இங்கிலாந்துக்கு கிளம்பியாகவேண்டும், ஆனால் பாஸ்போர்ட், டிக்கெட் எதுவும் என்னிடத்தில் இல்லை.
அன்று இரவு துக்கமே வரவில்லை, மறுநாள் காலை முதல் வேலையாக அக்கா அந்த கூரியர் அலுவலகத்தை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டாள். என்னுடைய தபாலைத்தான் முதலில் கொண்டுசேர்ப்பார்கள் என்று உறுதிபடுத்திக்கொண்ட பிறகே தொலைபேசி துண்டிக்கப்படது. சொன்னதுபோலவே ஒரு ஊழியர் எனது தபாலை மட்டும் சுமந்துகொண்டுவந்து கொடுத்துவிட்டு போனார்.
எனது பாஸ்போர்ட்டையும் டிக்கெட்டையும் பார்த்தபிறகுதான் நிம்மதியாக மூச்சு விடமுடிந்தது.
அன்று இரவு (மறுநாள் காலை?) 1:30 மணிக்கு ஒருவழியாக விமானம் ஏறினேன்.

***************

இங்கிலாந்து வந்து சேர்ந்த பொழுது மணி மதியம் 1:30. ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து ரெடிங்கிற்கு பஸ் மூலம் சென்றடைந்தேன். என் உபயோகத்திற்கு ஒரு காரை வாடகைக்கு எடுக்கலாமென்ற பொழுதும் நான் அதனை தவிர்த்துவிட்டேன். இங்கிலாந்தில் கார் ஓட்டுவது அவ்வளவு சுலபமல்ல. இந்தியா மாதிரியே சாலையின் இடது புறம் கார் ஓட்டும் பழக்கம் இங்கிலாந்தில் பின்பற்றப்பட்டாலும் சாலைவிதிகள் மிக அதிகம், அதனுடன் சாலையில் உள்ள குறியீடுகள் முதல் முறை பார்ப்பவர்களுக்கு குழப்பத்தையே அளிக்கும் (அமேரிக்க சாலை விதிகளைவிட குழப்பம் நிறைந்தது) .

ஏற்கனவே ஒருமுறை ரெடிங்கில் தங்கிய அனுபவம் இருந்ததால் என் ஹோட்டலை கண்டுபிடிக்க அதிக நேரமாகவில்லை. சென்ற முறை நான் ஒரு வீட்டினை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தேன், அதனால் தங்கியிருந்த அனைத்துநாட்களும் என் சமையல்தான் (என் பகோடாவிற்கும் பஜ்ஜிக்கும் அங்கு ஒரு சிறு விசிறி குழுவே (ரசிகர் மன்றம்??) ஆரம்பிக்கப்பட்டது என்பதை நான் இங்கே குறிப்பிடவேண்டியதில்லை ). இம்முறை ஹோட்டலில் தங்குவதனால் சமைக்கமுடியாது, ஆனால் ஒரு மாதகாலமும் நினைத்த இடத்தில் சாப்பிடலாம் என்று எண்ணிய பொழுது நன்றாகவே இருந்தது. ஆகவே முடிந்த வரையில் இத்தாலியன், ஸ்பானிஷ் போன்ற அனைத்து விதமான உணவுகளையும் சுவைத்துவிடவேண்டும் என்று முடிவு செய்தேன்.


அனுப்பியவர்: கண்ணன் @ பின்தொடருங்கள்