நிலவில் வேலை தேடலாம் வாங்க

ஏப்ரல் 1ம் தேதி வந்ததும் வந்தது, அனைவரும் முட்டாள்களை தேடி அலைய ஆரம்பித்துவிட்டார்கள். கண்ணில் படுபவர்களை எல்லாம் முட்டாள்களாக்க முயற்ச்சி நடந்தது, ஆனால் அந்த முயற்சிகளையெல்லாம் கூகிளின் அறிவிப்பு ஏப்பம்விட்டுவிட்டது. நிலவில் அமைக்கப்படவிருக்கும் கூகிளின் கோபர்னிகஸ் மையத்திற்கான வேலைவாய்ப்பு விளம்பரம் அது. அழகான விளக்கங்கள், படங்களுடன் இந்த அறிவிப்பு இருந்தது (உதாரணத்திற்கு கீழே சில படங்கள்).
(கோபர்னிகஸ் மையத்தின் வெளியமைப்பு)
(கோபர்னிகஸ் மையத்தில் வேலையிடங்கள்)

ஏப்ரல் 1ம் தேதியின் மூலத்தைப் பற்றி அறிய இந்தக் கட்டுரையை பார்க்கவும் (ஹோலிப் பண்டிகையும் முட்டாள்கள் தினத்தை குறிப்பிடுவதாயிருக்கலாம் என்கிறது இந்த கட்டுரை).

மிகச் சிறந்த 100 ஏப்ரல் தின அறிவிப்புகள் பற்றி அறிய இங்கே சொடுக்கவும்.

கூகிளின் ஏப்ரல் தின அறிவிப்போடு வெளிவந்த மற்றுமொரு அறிவிப்பு கூகிளின் அஞ்சல் சேவை பற்றியது. ஜி-மெயில் எனப்பெயரிடப்ப்ட்டிருக்கும் இந்த சேவையில் 1000 மெகா பைட்டுகள் (ஹாட்மெயில் அஞ்சல் போல ஐந்நூறு மடங்கு அதிகம்) அளவில் அஞ்சல் பெட்டிகள் இலவசமாகக் கிடைக்கும் என்கிறது இந்த அறிவிப்பு. இந்த அறிவிப்பும் நம்பும் படியாக இல்லாததால் கூகிள் இன்று மற்றுமொரு அறிக்கையில் ஜி-மெயிலுக்கும் ஏப்ரல் 1ம் தேதிக்கும் சம்பந்தமில்லை என்றறிவித்திருக்கிறது.

தற்பொழுதெல்லாம் நல்ல இ-மெயில் முகவரி கிடைப்பது (இ-மெயில் மட்டுமல்ல எந்த ஒரு வலைத்தளத்திலும் நல்ல அடையாளப் பெயர் கிடைப்பது) குதிரைக் கொம்பாகிவிட்ட நிலையில் இந்த அறிவிப்பு ஒரு நம்பிக்கையை துளிர்விடச்செய்திருக்கிறது. ஆனாலும் இந்த ஆசாமி போல பலர் இருப்பது கவலை அளிக்கிறது. ( நானும் எனது ஜி-மெயில் முகவரிக்காக இப்பொழுதிலிருந்தே கர்சீஃப் போட வேண்டியது தான் போலிருக்கிறது)


அனுப்பியவர்: கண்ணன் @ பின்தொடருங்கள்