எழுதுகிறேன் எழுதுகிறேன்

சென்ற வாரம் தாத்தாவைக் காண சென்னை சென்றிருந்தேன். எப்பொழுது சென்னை சென்றாலும் தாத்தாவுக்கு ஹிந்து பேப்பர் படிக்கும் பொறுப்பு எனக்கு வந்துவிடும். இம்முறை தாத்தா எனக்கு வேறு வேலை வைத்திருந்தார்

"டேய் கண்ணா இங்கே வா.."

"இதோ தாத்தா.."

"ஒரு பேப்பர், பேனா எடுத்துண்டு வா"

"...."

"நான் சொல்லறதையெல்லாம் எழுதிக்கோ"

அவ்வளவு தான், மடமடவென்று தாத்தா சொல்ல ஆரம்பித்துவிட்டார். குச்சி போன்ற ஒரு வஸ்துவை (அதாங்க பேனா) வைத்துக்கொண்டு நான் பட்ட கஷ்டத்தை அவர் பார்த்திருக்க நியாயமில்லை. பேப்பரில் எழுதி அதுவும் தமிழில் எழுதி எத்தனை நாட்கள் ஆகிவிட்டன. தாத்தா வீட்டில் ஒரு பிரிண்டர் இல்லையே என்று வருத்தப்பட்டேன்.

பேனாவைத்தொட்டால் எனக்கு எழுதவரும் ஒரு(ரே?) விஷயம் என் கையெழுத்து தான் (கிரெடிட் கார்டு ரசீதில் கையெழுத்து இல்லையென்றால் ஒப்புக்கொள்ளமாட்டார்களே). ஆனாலும் தவறாமல் ஒரு பேனா மட்டும் என்னுடன் எப்பொழுதும் இருக்கும். அலுவலகத்தில் நான் செல்லும் ஒவ்வொரு மீட்டிங்கிற்கும் பேனாவும் கைப்புத்தகமும் என்னுடன் ஆஜராகிவிடும். பிறகு மீட்டிங் முடிவதற்குள் கைப்புத்தகம் முழுவதையும், சித்திர எழுத்துக்களால் நிரப்பிவிடுவேன் (மீட்டிங் எவ்வளவு நன்றாக இருந்தது என்பதை அந்த புத்தகத்தைவைத்தே தெரிந்துகொள்ளலாம்).சித்திர எழுத்துகளுக்கு பழகிப்போன என் கை அன்று நான்கு வரிகள் எழுதுவதற்குள் வலிக்கத்தொடங்கியது. பேசாமல் (என் சித்திர எழுத்துக்களையொத்த) ஜப்பானிய எழுத்துக்களை கற்றுக்கொள்ளலாமென்று பார்க்கிறேன். இப்பொழுது பத்தாம்/பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களை நிணைத்தாலே கைவலிக்கும் போலிருக்கிறது, நானும் ஒரு காலத்தில் அவ்வாறு பக்கம் பக்கமாக எழுதித் தள்ளியிருக்கிறேன் என்று நினைத்தால் மலைப்பாகவே இருக்கிறது.
எனக்கு தான் இப்படித் தோன்றுகிறதா இல்லை உங்களுக்குமா? வாக்களியுங்களேன்.





நீங்கள் பேனாவை உபயோகிக்கிறீர்களா?




தினமும்
எப்பொழுதாவது
உபயோகித்திருக்கலாம், நினைவில்லை
பேனா என்றால் என்ன?






அனுப்பியவர்: கண்ணன் @ பின்தொடருங்கள்