விஜயபுரத்து விஜயம்

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் விஜயபுரத்திற்குள் புத்தாண்டிற்காக நுழைந்‌தேன், ஐந்‌து நாட்கள் விடுமுறை வீட்டிலுள்ள எனது புத்தக அலமாரியை குடையும் வாய்ப்பு கிடைத்தது.
*********************************************************************

"உன்னோட ஹாபி என்ன?"

ஆறாம் வகுப்பில் புதிதாகச் சேர்ந்திருந்‌த நான் வகுப்பறையில் அப்பொழுத்துதான் நுழைந்தேன், நுழைந்‌தவுடன் வந்‌து விழுந்‌த கேள்வியை வெறித்துப்பார்த்துவிட்டு,

"ஹாபின்னா?" (காபி தெரியும் அது என்ன ஹாபி)

"ஹாபின்னா ஹாபிதான்", இதுகூட தெரியாதா என்பது போல பதில் வந்‌தது. அவன் அந்‌த வகுப்புத் தலைவனாக இருக்கவெண்டும, வகுப்பிளுள்ள அனைவரையும் பற்றி விபரங்களை சேகரித்துக் கொண்டிருந்‌தான்.

"மத்தவங்களெல்லாம் என்ன சொல்லியிருக்காங்க?"

என்னை ஏற-இறங்க பார்த்துவிட்டு தன் கையிலிருக்கும் புத்தகத்தை காண்பித்தான். அதில் நிறைபேருக்கு முன்னால் "ஸ்டாம்ப் கலெக்ஷன்" என்று எழுதியிருந்‌தது. ஒரு சிலர் பெயருக்கு முன்னர் "ஒன்றுமில்லை" என்றும் எழுதியிருந்‌தது.

"என்ன சீக்கிரம் சொல்லு"

"ஸ்டாம்ப் கலெக்ஷன்" (ஒன்றுமில்லை என்று சொல்லத் தயக்கம்).

என் பெயருக்கு முன்னால் நான் சொன்னதை கிறுக்கிவிட்டு அடுத்தவனைப் பார்க்க நகர்ந்‌தான்.அன்று அவன் எழுதியது ஒன்றும் புரியவில்லை, அடுத்த நாளே எனது ஆங்கில வாத்தியார் அதைப் புரிய வைத்துவிட்டார். அன்றைய பாடத்தலைப்பு "ஹாபீஸ்". பாடத்தை நடத்தி முடித்ததும் கையிலிருந்‌த வெள்ளத்தாளிலிருந்‌த்ததை படிக்க ஆரம்பித்தார்.

....
"கண்ணன் - ஸ்டாம்ப் கலெக்ஷன்" ...

"கண்ணன் நீ உன்னுடைய கலெக்ஷனை நாளை எடுத்து வா"

பகீரென்றது எனக்கு. "சார், நாளைக்கு வேண்டாமே"
....

"சரி, நாளைக்கு வேண்டாம். திங்கட்கிழமை எல்லாரும் அவங்களோட ஹாபியைப்பற்றி ஒரு கட்டுரை எழுதிட்டு வரணும். அப்போ கண்ணன் தன்னுடைய ஹாபியைப் பற்றி விளக்குவான்"

ஏன் எனக்கு மட்டும் இப்படி என்று நொந்துக்கொண்டு தலையாட்டி வைத்தேன்.

இன்னமும் ஐந்‌தே நாட்களில் ஹாபியென்றால் என்னவென்று தெரிந்‌துகொள்ளவேண்டும், அதோடு மட்டுமல்லாது ஸ்டாம்ப் கலெக்சன் என்றால் என்னவென்றும் தெரிந்‌து கொள்ளவேண்டும். அன்று முதல் பார்ப்பவர்களை எல்லாம் கேட்கத்தொடங்கினேன்

"உங்களோட ஹாபி என்ன?" ... (ஹாபி என்றாலே என்ன வென்று கேட்பதற்குத் தயக்கம்).

ஹாபியென்றால் பொழுதுபோக்கு என்பது தெரிய முழுசாக இரண்டு நாட்கள் பிடித்தது.
...
சரி .. சரி நீங்கள் கொட்டாவி விடுவது எனக்கு தெரிகிறது, விஷயத்திற்கு வருகிறேன். மேற்சொன்னபடி ஆரம்பித்த எனது "பொழுதுபோக்கு" நாளொரு ஸ்டாம்பும் பொழுதொரு காயினுமாக வளர்ந்‌தது. ஒரு சமயத்தில் என்னிடம் ஐந்‌தாயிரத்திற்கு குறையாமல் தபால் தலைகள் இருந்‌தன. சேகரிப்பிலிருந்‌த வெளிநாட்டு (மற்றும் அரிய உள்நாட்டு) நாணயங்களின் என்னிக்கை சுமார் ஐந்‌நூறை தாண்டியது. இம்முறை ஊருக்கு சென்றிருந்‌த பொழுது நான் சேகரித்த தபால் தலைகளையும் நாணயங்களையும் குடைந்‌தேன். அதிலிருந்‌த சில நாணயங்களையும் தபால் தலைகளையும் பற்றி அடுத்த பதிவுகளில் கொடுக்கிறேன்.

வலையில் சில சுட்டிகள்:
1. Philately.com
2. American philatelic society
3. Numismatics

அனுப்பியவர்: கண்ணன் @ பின்தொடருங்கள்