திருவாரூர் விஜயம்

அப்பா அம்மாவை பெங்களூருக்கு குடிபெயர்த்து ஒரு மாதமாகிவிட்ட பிறகு சென்றவாரம் திருவாரூரிலிருந்‌து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் "கேக்கரை" என்ற கிராமத்திலுள்ள இராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக திருவாரூர் செல்ல வேண்டியிருந்‌தது. இம்முறை பயணத்திலிருந்‌த வித்தியாசத்தை ஆரம்பத்திலேயே உணர முடிந்‌தது. இதுநாள்வரை திருவாரூர்ப் பயணத்திற்கு அப்பா அம்மாவைக் காணவேண்டும் என்பதுதான் காரணமாக இருக்கும் ஆனால் முதல் முறையாக திருவாரூரைக் காணவேண்டும் என்பதற்காக பயணித்தோம். அப்பொழுது சுற்றுலா செல்லுவது போல ஒரு அந்‌நியத்தன்மை ஏற்பட்டதை தவிர்க்க முடியவில்லை.

பெங்களூரிலிருந்‌து வெள்ளிக்கிழமை மாலை தஞ்சாவூர் எக்ஸ்பிரஸில் கிளம்பி சனிக்கிழமை காலை ஆறரை மணிக்கு தஞ்சாவூர் வந்‌தடைந்தோம். ரயில் நிலையத்தில் இறங்கியவுடன் "திருவாரூர், நாகப்பட்டிணம் வழியாக நாகூர் வரை செல்லும் நாகூர் பாஸஞ்சர் இரண்டாவது ப்ளாட்பாரத்திலிருந்‌து புறப்படத் தயாராகவுள்ளது" என்ற அறிவிப்பு காதில் விழுந்‌தது. உடனே மூச்சிறைக்க டிக்கெட் கவுண்டர் வரை ஓடி எனது காலை உடற்பயிற்சியை முடித்துக்கொண்டேன். டிக்கெட் வாங்கி வண்டியில் நெருக்கியடித்து ஏறுவதற்கும் வண்டி புறப்படுவதற்கும் சரியாக இருந்‌தது. அப்பொழுது பெங்களூரிலிருந்‌து என்னோடு வந்‌த என்னுடைய சக பயணி ஒருவர் ரயிலில் மூச்சிறைக்க நின்றுகொண்டிருந்‌த என்னைப்பார்த்து "இவ்வளவு வேகமாக ஓடி டிக்கெட் வாங்கியிருக்க வேண்டியதில்லை, நான் டிடியி யிடம் சொல்லி அவரிடமே டிக்கெட் வாங்கிவிட்டேன்" என்று சொல்லி எனது வயிற்றெரிச்சலை சம்பாதித்துக் கொண்டார்.

ரயிலில் நெரிசல் நிறைய இருந்தாலும் அம்மா அப்பாவிற்கு ஓரிடத்தில் உட்கார வசதி கிடைத்தது. அப்பா என்னையும் உட்கார வைக்கப் பிரம்மப் பிரயத்தனப் பட்டு அது நடக்காததால் சும்மா விட்டுவிட்டார். நான் ரயிலில் எனது ஆஸ்தான இடமான கதவுப் பகுதியில் நின்றுகொண்டேன். எது எவ்வளவு மாறியிருந்‌தாலும் தஞ்சாவூரிலிருந்‌து திருவாரூருக்கான ரயில் பயணம் மட்டும் மாறவில்லை என்பதை உணர அதிக நேரம் பிடிக்கவில்லை. தஞ்சாவூரிலிருந்து திருவாரூருக்கு ரயிலிலோ அல்லது பேருந்திலோ பயணம் செய்ய பாக்கியம் கிட்டாதவற்களுக்கு, பச்சை வயல்வெளியிலும் பாம்பு போல பயணம் முழுவதிலும் குறுக்கே நெளிந்து வரும் ஆற்றின் ஓரத்திலும் செல்லும் பயணத்தை வார்த்தையில் விவரித்தால் நன்றாக இராது அதனை அனுபவிக்க வேண்டும்.


திருவாரூருக்கு செல்லும் வழியில் வயல்வெளி, ரயிலிலிருந்‌து எடுத்தது


திருவாரூர் வந்தடைந்த பொழுது மணி சரியாக ஒன்பது. ரயில் நிலையத்திலிருந்து வீட்டிற்கு பத்து நிமிட நடை, வீட்டை அடைந்ததும்தான் ஒருவித நிம்மதி ஏற்ப்பட்டது. திருவாரூருக்கு எப்பொழுது சென்றாலும் நேரத்தை வீட்டிலேயே செலவிட விரும்புவேன். ஆனால் இம்முறை வெளியே செல்லவேண்டும் என்று தோன்றியது. குளித்து முடித்ததும் சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பினேன். ஊரிலுள்ள இடங்கள் அனைத்தும் ஆங்காங்கே இருக்கிறதா என்று சோதனைப் போடுவதைப்போல ரயில் நிலையம், பஸ் நிலையம், கமலாலயம் என்று சுற்ற ஆரம்பித்தேன். சரியாகப் பனிரெண்டு மணிக்கு பசி வயிற்றைக் கிள்ளியதும் வீட்டிற்குத் திரும்பினேன். சனிக்கிழமையின் மிச்சம் டிவியின் முன்பும் என்னுடைய புத்தக அலமாரியைக் குடைந்ததிலும் போயிற்று.

திருவாரூர் சென்றால் காலை எழுந்திருக்கும் நேரம் என்னிஷ்டத்தைப் பொறுத்தது என்பதால் இரவு பனிரெண்டு மணிக்கு அப்பாலும் டிவி பார்ப்பது என் வழக்கம். 1991ம் ஆண்டு வாங்கிய எங்களது தொலைக்காட்சியில் பத்து சானல்களுக்குமேல் தெரியாதென்பதால் எப்பொழுதும் ஏதாவது தமிழ் தொலைக்காட்சியைப் பார்ப்பது வழக்கம். ஆனால் இம்முறை சித்தப்பா தான் பார்பதற்காக வேறொரு டிவியை பொறுத்தியிருந்தார். கையில் ரிமோட்டை வைத்துக்கொண்டு சானலை அலசியதில் "ஐயாம் சாம்" (Ian Sam) என்ற திரைப்படனம் கண்ணில் பட்டது. அதன் பிறகு ரிமோட்டைக் கையில் எடுக்க மனமில்லை. மனநிலை பாதிக்கப்பட்ட சாம் என்ற ஒரு முப்பது வயது "சிறுவனுக்கும்" அவனது பெண்னிற்கும் இடையே நிகழும் சம்பவங்களை மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தியிருந்தார் படத்தின் இயக்குனர் ஜெஸ்ஸி நெல்சன்.

படத்தில் மனநிலை சரியில்லாத"சாம்"மாகவே வாழ்ந்திருந்தார் "சேன் பென்" (Sean Penn). மிசெல் ஃபீபரும், படத்தில் சாம்மின் பெண்ணாக நடித்திருந்த டாகோடா ஃபான்னிங்கும் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டார்கள். என்னை ஆழமாக ஈர்த்த மிகச் சில படங்களில் இதுவும் ஒன்றாகியது. படத்தின் முடிவு சுபமானதாக இருந்த பொழுதும் படம் முடிந்ததும் மனதில் மிகுந்த பாரம் தங்கிவிட்டது.

படம் முடியும் பொழுது மணி ஒன்று. பெங்களூருக்கு திங்கட்கிழமையே திரும்பவேண்டிய நிர்பந்தத்தில் இருந்ததால் புதன் கிழமை நடக்கவிருந்த கேக்கரை இராமர் கோவில் கும்பாபிடஷேகத்திற்கு செல்ல இயலாது, ஞாயிற்றுக் கிழமை முதல் வேளையாக கோவிலுக்குச் சென்றுவிடுவது என்ற நிணைப்போடு தூங்குவதற்குச் சென்றேன்.

அனுப்பியவர்: கண்ணன் @ பின்தொடருங்கள்