வாரயிறுதிப் பயணங்கள்

இப்பொழுதெல்லாம் ஒவ்வொரு வார இறுதியிலும் எங்காவது செல்ல வேண்டியிருக்கிறது. கடந்த பத்து வாரங்களாக நான் வார இறுதிகளில் பெங்களூரில் இருக்கவில்லை. ஒவ்வொரு வார இறுதிப் பயணமும் ஏதாவது ஒரு வகையில் மிகவும் சுவாரசியமாக அமைந்து விடுகின்றது. சென்றவார இறுதியில் திருவாரூர் சென்றிருந்தேன், பெயருக்குத்தான் அது திருவாரூர் பயணம் ஆனால் திருவாரூரில் சனிக்கிழமை இரவு மட்டும் தான் தங்கினேன் மற்ற அனைத்து நேரமும் ஒரே க்ஷேத்ராடனம்தான்(அப்பாடா, சரியாக எழுதிவிட்டேன்). சனிக்கிழமை இரவு ஒப்பிலியப்பன்கோவிலுக்குச் சென்றோம். கோவில்களில் ஒப்பிலியப்பன் கோவிலுக்கு எப்பொழுது ஒரு தனியிடம் உண்டு. திருப்பதியில் அரைமணிநேரம் "ஜருகண்டி ஜருகண்டி" ஏதும் இல்லாமல் ஸ்வாமி தரிசனம் கிடைத்தது போன்ற ஒரு உணர்வு ஒப்பிலியப்பன் கோவிலில் ஏற்படும்.

ஞாயிற்றுக்கிழமை எனது தாத்தாவின் பூர்வீகத்திற்கு அருகிலுள்ள "குறிச்சி" என்ற கிராமத்திற்குச் சென்றிருந்தேன். மன்னார்குடியிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் குறிச்சி கிராமத்தின் மொத்த ஜனத்தொகை 800 நபர்களேயாகும். அக்கிராமத்திலுள்ள ஒரு பெருமாள் கோவிலின் புணரமைப்பிற்காக நடந்த "பாலாலயத்திற்கு" சென்றிருந்தேன். கோவிலின் புணரமைப்பு தொடங்குவதற்கு முன்னர் விக்கிரகங்களை அகற்றி வேறொரு இடத்தில் ஏளச்செய்யும் (ஏள = எழுந்தருள வின் பேச்சு வழக்குச் சொல்) சடங்கிற்குப்ப் பெயர்தான் பாலாலயம். அக்கோவிலில் மூலவராக "அபீஷ்ட வரதன்" பெருமாளும் தாயாராக "பெருந்தேவித்தயாரும்" ஏளியிருந்தார்கள். கோவில் புணரமைப்பிற்காக வந்திருந்த ஸ்தபதி அவ்விரு விக்கிரகங்களும் 700 ஆண்டுகளுக்கு முந்தையது என்று மதிப்பிட்டார்.



அபீஷ்ட வரதர்




பெருந்தேவி தாயார்


பாலாலயம் விழா ஒரு சிறு கும்பாபிஷேகம் போல இருக்கும், உண்மையில் இது கும்பாபிஷேகத்திற்கு ஒரு முன்னோடியே. கிராம மக்களின் முகங்களில் ஆச்சரியத்தையும் ஆர்வத்தையும் பார்க்க முடிந்தது. யாருமே பல வருடங்களாகச் சீந்தாத ஒரு பாழடைந்த கோவிலுக்கு நாங்கள் (அதுவும் சுமோவிலும் காரிலுமாக) வந்தது ஆச்சரியமாகத்தானே இருக்கும். கோவிலின் பாலாலயம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. பிறகுதான் விக்கிரகங்களை இடம்மாற்றும் நிகழ்ச்சிநடந்தது, இதுவரை ஏதோ கதை பேசிக்கொண்டிருந்த கிராம அதிகாரியின் முகத்தில் திடீரென்று ஒரே பரபரப்பு காணப்பட்டது, கோவிலுக்குள்ளிருக்கும் விக்கிரகங்களை அகற்றும் பணியை கிராம அதிகாரி மேற்பார்வையிட வேண்டும் என்றாலும் அவரது முகத்தில் இருந்த பரபரப்பு தேவையை விட சற்றே அதிகமாக இருந்ததாகப் பட்டது. இதற்காண காரணம் வெகு விரைவிலேயே புரிந்தது. எந்தவொரு கோவிலிலும் விக்கிரகங்களை நிறுவுவதற்கு முன்னர் விக்கிரகத்திற்கு அடிக்கல்லாக சில மூலிகைகளையும்(மருந்து) தங்கம், வெள்ளி, வைரம் மற்றும் நவரத்தினங்களையும் வைப்பது வழக்கம். அவ்வாறு இக்கோவிலில் உள்ள புதையலை(?)ப் பார்ப்பதற்குத்தான் இவ்வளவு பரபரப்பு.

விக்கிரகங்கள் அப்புரப்படுத்தப்பட்டவுடன் ஒரு சிறு கும்பலே அவ்விடத்தை முற்றுகையிட்டது, அங்கிருந்த மணல் முதலியவற்றைச் சேகரித்து அதில் துழாவ ஆரம்பித்தார்கள். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது, புதையல் ஏதும் கிட்டவில்லை. ஆனால் நானோ ஒரு பெரிய புதையலைப் பார்த்தேன், விக்கிரகங்களின் கீழிருந்த அக்காலக் காசுகள் தான் அது. அதனைச் சேகரித்தவர் அது தங்கக் காசுகள் என்ற நிணைப்போடரதனைச் சுரண்ட ஆரம்பித்தார், பின்னர் அதனை தரையிலும் போட்டு தேய்க்க ஆரம்பித்தார். மிகவும் போராடி அக்காசுகளை அவரிடமிருந்து மீட்டேன். அவற்றை ஆராய்ந்த பொழுது அவை பிரிட்டிஷ் இந்தியாவின் நாணயங்கள் எனத்தெரிந்தன. குறைந்த பட்சம் அறுபது வருடங்களுக்கும் மேலாகிவிட்டதால் நாணயங்கள் பச்சை நிறத்துடன் காணப்பட்டன. ஒரே ஒரு நாணயத்தில் மட்டும் அது 1942ம் வருடத்தைய அரை ரூபாய் நாணயம் என்று கண்டுபிடிக்குமளவிற்கு பச்சை நிறம் குறைந்திருந்தது.மற்ற நாணயங்களை அவற்றின் உருவத்தை வைத்து இரண்டு மற்றும் ஓரணாக்கள் என்று கண்டுபிடிக்க முடிந்தது. அக்காலத்தில் வெளிவந்த கால், அரை மற்றும் ஒரு ரூபாய் நாணயங்கள் வெள்ளியினாலானது, அதனை நான் அங்கே சொல்லியிருந்தால் அந்நாணயங்கள் யாருடைய பையிற்கோ சென்றிருக்கும், எல்லா நாணயங்களும் பித்தளையிலானது என்று சொல்லிவிட்டு அவற்றை ஒரு புகைப்படமும் எடுத்துக்கொண்டேன். பிறகு அந்நாணயங்கள் கிராம அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்நாணயங்களை அவர்கள் தூர எறியவோ, அல்லது வேறொருவருக்கு கொடுக்கவோமாட்டார்கள் என்ற உறுதியைப் பெற்றுக் கொண்டபிறகே அவ்விடத்தைவிட்டு நகர்ந்தேன்.



கோவிலிலிருந்த நாணயங்கள்

அனுப்பியவர்: கண்ணன் @ பின்தொடருங்கள்